தமிழகத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தாய், தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயரங்கன் (44), தனியார் கல்லூரி ஊழியரான இவருக்கு மஞ்சுளா (37) என்ற மனைவியும் சர்மிளா (14), கிஷோர் (11) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் குடித்து விட்டு வந்ததைக் தட்டிக் கேட்டதால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 11-ஆம் திகதி இரவு வீட்டில் இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் விஜயரங்கன் தூங்க சென்றுவிட்டார்.
நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது, விஜயரங்கன் மனைவி மஞ்சுளா பாறாங்கல்லுடன் தனது அருகில் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்துக்கொண்ட அவர் மனைவியை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பினார்.
அப்போது, நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த விஜயரங்கன், அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் திருப்போரூர் பொலிசார் மஞ்சுளாவிடம் விசாரிக்கச் சென்றனர்.
இதை அறிந்த மஞ்சுளா, நேற்று காலை குழந்தைகளுடன் கணவரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளனர்.
வெளியே சென்ற அவர்கள் வெகு நேரம் திரும்பாத நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒரு பெண்ணும், இரு குழந்தைகளும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
விசாரணையில், மூன்று பேரும் காயார் கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கனின் மனைவி மஞ்சுளா மற்றும் குழந்தைகள் சர்மிளா, கிஷோர் என்பது தெரிந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மகள் சர்மிளாவிடம் பொலிசார் பேசியபோது, தாய் மஞ்சுளாதான் கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும், அவரும் அறுத்துக் கொண்டதாகவும் கூறினார்.
மஞ்சுளா மற்றும் அவரது மகன் கிஷோர் கண் விழித்தால் மட்டுமே உண்மையான காரணம் தெரிய வரும் எனவும், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.