தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள புலிக்குத்தி நடுத்தெருவில் வசித்தவர் ரம்யா (வயது 23). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமான மறுநாள், மறு வீடு விஷேசத்திற்காக, புலிக்குத்திக்கு தன் கணவருடன் வந்தார்.
அப்போது ரம்யாவைத் தேடி அவரது உறவினர் முத்துகிருஷ்ணன் (வயது 27) வந்தார். அவர் வந்ததும், ரம்யா வீட்டிற்கு வெளியே இருந்த தனியான ஒரு இடத்தில் , சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில், ரம்யா வாயில் நுரை தள்ள, மயங்கி கீழே விழுந்தார். அதற்கடுத்து, முத்துகிருஷ்ணனும், வாயில் நுரை தள்ள மயங்கி கீழே விழுந்தார். அவர்களது அருகில், விஷ பாட்டில் ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இருவரையும், துாக்கிக் கொண்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு ரம்யாவைப் பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முத்துகிருஷ்ணனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரம்யாவும், முத்துகிருஷ்ணனும், காதலித்து வந்துள்ளனர். உறவு முறையில், ரம்யாவிற்கு, முத்துகிருஷ்ணன் சித்தப்பா முறை என்பதால், வீட்டில் தங்கள் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள், என்று முடிவு செய்து, தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதைக் கேட்டு, உறவினர்கள், கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.