தமிழகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரியின் மனைவி திருமணத்திற்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டில் கொள்ளையர்கள் 19 சவரன் நகை மற்றும் 25,000 பணத்தை கொள்ளையடித்து சென்றதால், பொலிசார் அந்த நபர்களை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். பொதுப்பணித்துறையில் கட்டட வரைபட இன்ஜினியராக சேலத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் ஷோபனா நேற்று விழுப்புரத்தில் இருக்கும் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஷோபனா உடனடியாக விழுப்புரத்திலிருந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் லாக்கர் உள்ளே பார்த்த போது, 19 சவரன் நகை மற்றும் 25,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்துள்ளார்.
இதுகுறித்து, அரியலூர் காவல் நிலையத்தில் ஷோபனா புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின் கொள்ளையர்கள் குறித்து அடையாளம் காணும் வகையில் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆளில்லாத வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.