தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடித்து வந்தவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் 3 ஏ.டி.எம் களை பயன்படுத்திய சிலரின் கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆய்வு செய்தனர்.
அப்போது குறிப்பிட்ட நபர் சம்மந்தப்பட்ட அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் இருப்பதை கண்டனர்.
இதையடுத்து பொலிசார் அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்த நிலையில் அங்கு வந்த குறித்த இளைஞரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பதும், வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.
அதாவது நாகரீகமாக உடையணிந்து கொண்டு இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் மையத்துக்குள் பணம் எடுப்பது போல நிற்பார் கோபி.
மற்றொரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர் கார்டை உள்ளே நுழைத்தவுடன் அதில் பணமில்லை இதில் எடுத்து கொள்ளுங்கள் என விட்டுக்கொடுப்பது போல கோபி நடிப்பார்.
இதனை அறியாத வாடிக்கையாளர்கள் கோபிக்கு நன்றி கூறிவிட்டு மற்றொரு இயந்திரத்தில் பணம் எடுப்பர்.
அப்போது அவர்களது ரகசிய எண்ணை அறிந்து கொண்டு அவர்கள் சென்றவுடன் கார்டு நுழைக்கப்பட்ட ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து கொண்டு கோபி சென்றுவிடுவார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.