உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.
இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர் தான்.
ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம்.
ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.
180வது நிறுவன தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது.
அன்று முதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.
உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர்.
உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.
தவலோராவின் அரசர் கேட்கிறார் சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?