கஜா புயலின் கோர தாண்டவம்! முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

வடக்கு மாகாண மக்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை இன்னமும் மீளப்பெறப்படவில்லை என்பதால் மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பில் மேற்படி திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம்.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “GAJA” என்ற பாரிய சூறாவளிமேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் திகதி அதிகாலை 00.30 மணிக்கும் 02.30 மணிக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கரையைக் கடந்துள்ளது. இத் தொகுதி 16ஆம் திகதி அதிகாலை 02.30 மணிக்கு இலங்கைக்கு வடக்கு-வடமேற்காக காங்கேசன்துறையிலிருந்து அண்ணளவாக 75 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 10.4N கிழக்கு நெடுங்கோடு 79.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த 6 மணித்தியாலங்களில் படிப்படியாக பலமிழந்து ஒரு சூறாவளிக் காற்றாக மாறும் சாத்தியம் உள்ளது.

இத் தொகுதி நவம்பர் இன்று இலங்கையை விட்டு விலகிக் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்குப் பகுதியிலும் வடகடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை இன்று மாலையிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் 100 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

மேல் மாகாண கரையோரப்பகுதிகளிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் காலை வேளையில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.