ஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம்!

ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் ( 14.11.2018) இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த குறித்த தாய் திருமணமாகி நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்காததால்  கடந்த வருடம் இந்தியாவில் சிகிச்சை பெற்று கருத்தரித்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இவருக்கு பிரசவ வலி ஏற்படவே யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு  நேற்றுமுன்தினம்  மூன்று பெண்குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

மரணம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார் .

யாழ்.போதனா வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.