விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரி மாணவிகளை, பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, ஜனாதிபதி, பிரதமர், மு.க. ஸ்டாலின், திருமாவளவன், மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார். அதில், “ தேவையில்லாமல், இந்த விவகாரத்தில் என் கணவர் மீது வீண் பழி சுமத்தி, சிறையில் அடைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள், ஒரு வாக்கு மூலத்தை உருவாக்கி, அதில், என் கணவரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்.
நிர்மலாதேவி பேசிய ஆடியோக்களை ஆய்வு செய்தாலே, இந்த உண்மை புரியும். கடந்த 8 மாதங்களாக, நானும் என் குழந்தைகளும், மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். என் கணவரைக் கூட என்னால் காண இயலவில்லை. என் பிள்ளைகள், அப்பா எப்போ வருவார்? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எனவே. இந்த உண்மையை உணர்ந்து, இந்த வழக்கில் இருந்து என் கணவரை, விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடில், நான் என் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.