புயல் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட, தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
கஜா புயலால் பொதுமக்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவிப்பது மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் புயலுக்கு முன் தமிழக அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பெருமளவு உயிர்தேசம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டுவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.