தமிழக மூலைமுடுக்குகளில் எல்லாம் தொடங்கும் புரட்சி – சரித்திரத்தை மாற்றியமைக்கும் அறிவிப்பு.!

இந்திய அளவில் முதன்முறையாக போட்டித் தேர்வுகளுக்கான மனிதநேயத் தொலைக்காட்சி காணொலிப் பயிற்சியை அறிமுகம் செய்வதால் வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில் பின்தங்கிய மாணவர்களை மத்திய-மாநில அரசுகளின் கீழ் பல்வேறு வகையான உயர் பதவிகளில் அதிகளவில் இடம் பெற வைக்கவேண்டும் என்ற சமுதாய நோக்குடன் கடந்த 13 ஆண்டுகளாக மனிதநேய மையம் செயல்பட்டு வருகிறது.

எங்களிடம் பயிற்சி பெற்று இதுவரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகள் தேர்வுகளில் 3 ஆயிரத்து 226 பேரும், வங்கி தேர்வு எஸ்.எஸ்.சி., இந்து அறநிலையத்துறை, இந்திய வனப்பணி, ரெயில்வே, விவசாய அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி, காவல்துறை பணி, குரூப்-4 தொகுதிக்கான தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மாணவர்கள் சமுதாயத்துக்கு பெரும் பங்காற்றி வரும் மனிதநேய இலவச பயிற்சி மையம் அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததின் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களிடம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டை விட்டு மாநில-மாவட்ட தலைநகரங்களில் தங்கி படிக்கும் சூழ்நிலை உள்ளது.

கிராமப்புற மாணவர்கள் சென்னை வந்து தங்கி பயிற்சி பெற குறைந்தபட்சம் ரூ.2½ லட்சம் செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் எல்லோராலும் முதல் முயற்சியில் வெற்றி பெறவும் முடிவதில்லை. அப்படி முயற்சித்து வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை 10-ஐ கூட தாண்டுவதில்லை. இப்படி ஆண்டுதோறும் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவும், படிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் வருகிறது.

அனைவருக்கும் இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சி, பாட புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது மனிதநேய மையத்துக்கு இயலாத காரியமாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் பயிற்சிக்காக அணுகுவதால் அனைவருக்கும் இலவச பயிற்சியை அனைத்து வசதிகளுடன் வழங்குவது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.

தனியார் விடுதிகளில் தங்குவது, உணவு, போக்குவரத்து செலவு என மாணவர்களை படிக்க வைப்பதில் அவர்களது பெற்றோருக்கும் கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. பெண்களை தனியாக அனுப்பி படிக்க வைக்க பெற்றோர் தயங்குவதால், தகுதியுடைய பெண்கள் உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதுபோல நடைமுறை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவித செலவுமின்றி, பயமின்றி புதிய முறையிலான பயிற்சியை அறிமுகப் படுத்த உள்ளோம்.

பள்ளி-கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றிபெறுவதற்கு அடிப்படை பயிற்சிகளை அளித்து அவர்களை தயார் செய்யும் வகையிலும், அரசு அதிகாரி எனும் லட்சியத்தோடு உள்ள பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஏதாவது ஒரு பணியில் இருப்பவர்களும் இந்த பயிற்சியை தவறாமல் கவனித்து பாடங்களில் தேர்ச்சி பெறலாம்.

டெலிவிஷன் மூலமாக காணொலி வகுப்புகளில் படித்து பயிற்சிபெற்று வரும் மாணவர்கள், ஓராண்டு காலத்திலேயே போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும். ஓராண்டு கழித்து தேர்வு நடத்தப்படும்போது இதில் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை வெற்றியாளர்களாக உயர்த்தும் முயற்சி தான் இது.

இவ்வாறு நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம், பயிற்சி, உணவு முதலியவை இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு எந்தவித செலவும் இருக்காது. இதுபோன்றே ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த புதிய பயிற்சியின் மூலம் இளமைக்காலம் முழுவதும் போட்டித்தேர்வு எழுதியே காலத்தை வீணடிக்க தேவையில்லை. எதை படிக்க வேண்டும்? என்று தெரிந்து உரிய முறையில் பயிற்சி பெறலாம். இதன் மூலம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணியில் இருப்பவர்கள் ஆகியோர் தங்கள் சொந்த ஊரிலேயே பயிற்சி பெறமுடியும்.

சாதி, சமய, இன, பொருளாதார பாகுபாடின்றி அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் ஒரு பைசா செலவில்லாமல் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இடம் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம். உண்மையான ஜன நாயக மக்களாட்சி தத்துவத்தின்படி நேர்மையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்பது மனிதநேய கனவு திட்டத்தின் மற்றுமொரு புதிய தொடக்கமாகும்.

இதுகுறித்த முழு விவரங்களுக்கு mntfreeias.com எனும் மனிதநேய அறக்கட்டளை இணையதள முகவரியையும், 044-24330095 எனும் தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தின் தொலைதூரத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற சமுதாய நோக்குடன், இந்த பயிற்சி முறையை எனது தலைமையின்கீழ் உள்ள மனிதநேய அறக்கட்டளை அறிமுகப்படுத்துகிறது. டெலிவிஷன் மூலமாக நடத்தப்பட உள்ள இந்த பயிற்சிகளை பெற இயலாத வகையில் கிராமங்கள் அல்லது மாணவ-மாணவிகள் இருந்தால், அப்படி இருப்பவர்களுக்கு உதவிட நினைக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை பெறலாம்.

தொலைதூர பகுதி மாணவர்களை ஒருங்கிணைத்து ஓரிடத்தில் அவர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வழிகாட்டலாம். உள்ளூர் கிராம பஞ்சாயத்துகள் மூலமாக மாணவர்களுக்கு உதவ விரும்பினாலும், அதற் கான வழியை மனிதநேய அறக்கட்டளை செய்து தரும்.

இந்த பயிற்சியை மேம்படுத்த உரிய ஆலோசனைகள், ஆர்வமுள்ள பயிற்சியாளர்கள், கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் பயிற்சி வகுப்பில் அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஆலோசனைகளை அனுப்பலாம்’ என்று அதில் கூறியுள்ளார் .