சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவிற்காக கோயில் நடை திறக்கப்பட்டது. இனி மகரவிளக்கு பூஜை முடியும் வரை கோயில் நடை திறந்திருக்கும்.
இதற்கிடையில், சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல முயன்றதால், பம்பையில் அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காவல் துறையினருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். சசிகலாவை அவர்கள் கைது செய்தனர்.
சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்றனர்.
அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா காவல் சூப்பிரண்ட் யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோயில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று காவல் துறையுடன் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.
தரிசனத்துக்கான ரசீதை உங்களிடம் நான் ஏன் காட்ட வேண்டும்? காட்டினால் நீங்கள் பூஜை செய்வீர்களா? என்றும் அவர் காவல் துறையினரிடம் கேட்டார். இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த காவல் துறையினர், சிட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.