பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதிய வன்முறை சம்மந்தமாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஐதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் ஆகிய 5 பேரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி முதல் எழுத்தாளர் வரவரராவ் காவல்துறையினரால் ஐதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். வரவரராவ் புனே நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யகோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த புனே நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் புனேயில் இருந்து ஐதராபாத்தில் இருக்கும் வரவரராவ் வீட்டுக்கு நேற்று இரவு சென்றனர். அங்கு வீட்டு காவலில் இருந்த வரவரராவை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் காந்தி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் அதன் பின்னர் அவரை நள்ளிரவு ஐதராபாத்தில் இருந்து புனேவுக்கு அழைத்து சென்றனர். இன்று புனேவில் இருக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.