அவளை கொன்றுவிட்டீர்களா? திருமணமான அடுத்த நாள் கடத்தப்பட்ட மனைவி: கதறும் இளைஞர்

திருமணமான 2-வது நாள் பெற்றோரால் கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தர வலியுறுத்தி இளைஞர் உதவிக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த எட்வின் பிலிப் என்ற இளைஞர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆரதி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்தை அடுத்து எட்வினின் சொந்த ஊருக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆனால் இந்த தகவல் தெரியவந்த ஆரதியின் பெற்றோர் பொலிசாரின் உதவியுடன் ஆரதியை பலவந்தமாக கன்னியாகுமரிக்கே அழைத்து சென்றுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றத்தில் ஆரதியை ஒப்படைக்கலாம் என்ற ஒப்புதலுக்கு அடுத்தே கேரள பொலிசார் ஆரதியை தமிழக பொலிசாருடனும் அவரது பெற்றோருடனும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் ஆரதி தொடர்பில் எந்த தகவலும் இல்லை என எட்வின் தெரிவித்துள்ளார்.

தமது மனைவியை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவளை அவர் கொன்று விட்டார்களா என்பது கூட தெரியாமல் தவித்து வருவதாகவும் எட்வின் தமது பேஸ்புக் பக்கத்தில் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

ஆரதியின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் இருப்பதாகவும், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தமிழக பொலிசார் கூறியதை அடுத்தே எட்வினின் வீட்டில் இருந்து ஆரதியை அவர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் ஆரதியை எங்கே கொண்டு சென்றார்கள் என்ற ஒரு தகவலும் இதுவரை இல்லை என எட்வின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதி காவல் நிலையத்தில் ஆரதியை ஆஜர்படுத்தியதாக தகவல் உள்ளது.

அங்கிருந்து அவரது பெற்றோர்கள் அவரை எங்கே கொண்டு சென்றார்கள் என தெரியவில்லை, தயவு செய்து தமது மனைவியை கண்டுபிடிக்க உதவுங்கள் என கேட்டு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.