சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் 100 அடி சாலையில் நேற்றிரவு 4 வயது பெண் குழந்தை ஒன்று அழுதபடி நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட, அங்கு வந்த சிலர் குழந்தையை மீட்டு ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், அங்கு போலீசார் யாரும் வராததால், உடனே கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் குழந்தையைத் தேடியபடி தாய் விஜயலட்சுமி வரவே, மீட்ட பொதுமக்களே விசாரித்த பின்னர் அவரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், அங்கு வந்த ராஜமங்கலம் போலீசார் அனைவரிடமும் விசாரித்து உள்ளனர். பின்னர் குழந்தையைத் தாங்கள் கண்டுபிடித்தது போல் காட்டிக் கொள்வதற்காக செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம்பத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவரை, போலீஸார் கடுமையாக திட்டினர். உடனே அங்குவந்த கோயம்பேடு காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் தீபாவும் சேர்ந்து முருகனை கடுமையாக திட்டத் தொடங்கினார்.
இந்நிலையில் போலீசாருக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் முருகனை, பெண் உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்து போலீசாரும் முருகனை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் முருகனை ரோந்து வாகனத்தில் ஏற்றி கூடி செல்லும்போதும் விடாமல் தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் எதிர்ப்பினால் போலீஸார் அவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி அவரை விடுவித்தனர். பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காகவும், சமூகத்திற்காக மக்களுடன் இணைந்து செயலாற்றவேண்டிய காவல்துறை இவ்வாறு நடந்து கொண்ட விதம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.