பரபரப்பாக சென்ற அபுதாபி டெஸ்ட்! தோல்வியடைந்த பாகிஸ்தான்

அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த 16ஆம் திகதி அபுதாபியில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 153 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 74 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 249 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 3வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 48 ஆக இருந்தது.

பின்னர் கைகோர்த்த அசார் அலி-அசாத் ஷபிக் ஜோடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது. இதன்மூலம் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. அசாத் ஷபிக் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பாபர் அசாம் 13 ஓட்டங்களிலும், கேப்டன் சர்ப்பராஸ் அகமது 3 ஓட்டங்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஆசிப், யாசிர் ஷா இருவரும் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அந்த அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹசன் அலியை ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலேயே அஜாஸ் படேல் வெளியேற்றினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் வெற்றிக்காக போராடிய அசார் அலி அரைசதம் அடித்தார். இந்நிலையில் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், அசார் அலி 65 ஓட்டங்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதனால் பாகிஸ்தான் 171 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அபாரமாக பந்துவீசிய அஜாஸ் படேல் 59 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி கடைசி 6 விக்கெட்டுகளை 41 ஓட்டங்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.