உலகத்தை குழப்பத்திலிருந்து காப்பாற்ற ஐரோப்பாவை ஒன்றிணைப்பது நமது கடமை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே ஐரோப்பா தன்னை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலிருந்து தனித்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது.
இது தொடர்பாக பல சம்பவங்கள் தொடர்ச்சியாக உலக அரங்கில் அரங்கேறி வருகின்றன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு தனி ஐரோப்பிய ராணுவம் வேண்டும் என இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுக்க, அதற்கு ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் எரிச்சலானார்.
என்றாலும் சற்றும் பின்வாங்காத பிரான்சும் ஜேர்மனியும் தொடர்ந்து ஐரோப்பிய ஒற்றுமை குறித்தே குரல் கொடுத்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஐரோப்பா, பெரிய சக்திகள் விளையாடும் விளையாட்டுப் பொருளாக மாறிவிடக்கூடாது என்றார்.
இன்னும் ஒருங்கிணைந்த ஒரு ஐரோப்பிய ஒன்றியமும், கூட்டு ஐரோப்பிய பட்ஜெட்டும் தேவை என்று கூறியுள்ளார் அவர்.
அவரது உரையை பாராட்டி பேசிய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான நட்பும் ஒத்துழைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதையும் அது ஐரோப்பாவிற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள் என்றார்.
இந்நிலையில் பெர்லினிலேயே இமானுவல் மேக்ரானின் கருத்துக்கு மாற்றுக் கருத்தும் நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.