அமெரிக்காவின் சிகாகோ நகரின் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் பெண் மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
குறித்த மருத்துவர் அந்த இளைஞரின் முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. குறித்த மருத்துவர் கோபமாக அந்த இளைஞரை நோக்கி கத்திப் பேசியதைக் கேட்டு அந்த மருத்துவரின் தோழி வெளியே வந்துள்ளார்.
இவர்கள் சண்டையை அறிந்து அவர் சமாதனம் செய்ய முயன்றார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான தோழி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று மருத்துவமனைக்குள் ஓடினார். அதற்குள் அந்த பெண் மருத்துவரை அந்த இளைஞர் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிரிழந்தார்.
இதனால் மருத்துவமனையில் பீதி ஏற்பட்டது. மருத்துவ பெண் உதவியாளரையும் அந்த இளைஞர் சுட்டுள்ளார்.
இதில் அந்தப் பெண் உதவியாளரும் பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த பொலிசார் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் பொலிசாரை நோக்கியும் சரமாரியாகச் சுட்டார்.
இதில் ஒரு பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பொலிசுக்கும் அந்த இளைஞருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சிகாகோ காவல்துறை தலைமை செய்தி தொடர்பு அதிகாரி அந்தோணி, இங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் அதிகாரி சாமுவேல் ஜிம்மன்ஸை இழந்துவிட்டோம். அதோடு இந்த நகரம் ஒரு மருத்துவரையும் மருத்துவ உதவியாளர் ஒருவரையும் இழந்துள்ளது.
நாங்கள் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
சமீபத்தில், புளோரிடா மாகாணத்தில் யோகா மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பிட்ஸ்பர்க் நகரில் ஜெபக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.