தூக்கில் தொங்கிய அழகிய இளம்பெண்: அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தை…

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில் அவரை கொல்லப்பட்டுள்ளார் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (26). இவருக்கும் சரவணன் (35) என்பவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது சரவணணுக்கு 7 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுக்கப்பட்ட நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அவர் குடுமபத்தார் ஜெயஸ்ரீயை கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

இதனையடுத்து ஜெயஸ்ரீ மனஉளைச்சல் காரணமாக தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி அதே பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தனர்.

அப்போது பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயஸ்ரீ தன்னுடைய சாவுக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

இதற்கிடையே ஜெயஸ்ரீக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாக நேற்று முன்தினம் தனது தந்தையிடம் கூறினார். அவர் மகள் வீட்டிற்கு சென்று தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதற்கு ஜெயஸ்ரீ சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி தந்தையை அனுப்பிவிட்டார்.

வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் ஜெயஸ்ரீயுடன் செல்போனில் பேச முயன்றார். அப்போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சரவணனுடன் பேசியபோது, உங்கள் மகள் கதவை பூட்டிக்கொண்டு திறக்கமாட்டேன் என்கிறாள் என்று கூறினார்.

இதனால் பதறிப்போன ஜெகநாதன் மகள் வீட்டுக்கு விரைந்து சென்று கதவை திறந்து பார்த்தபோது மின் விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் ஜெயஸ்ரீ பிணமாக கிடந்தார். அருகில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ஜெயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

எனது மகளின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுகின்றனர். எனது மகள் உடலில் காயங்கள் உள்ளன. எனவே எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயஸ்ரீயின் தந்தை ஜெகநாதன் பொலிசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் ஜெயஸ்ரீயின் கணவர் சரவணன், மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் பத்மினி ஆகியோரை பொலிசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.