வெளி மனிதர்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் அந்தமான் தீவு ஒன்றில் மதபிரச்சாரம் செய்ய அத்துமீறி நுழைந்த அமெரிக்க பாதிரியார் அங்குள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
வங்காள விரிகுடா கடற்பகுதியில், மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,220 கி.மீ. தூரத்திலும், மற்றும் சென்னைக்கு 1,190 கி.மீ. தூரத்திலும் அந்தமான் – நிக்கோபார் தீவுக்கூட்டம் அமைந்துள்ளது. சிறு சிறு தீவுகளான இவை சுமார் 700 கி.மீ. வரை பரவியுள்ளன. மொத்த பரப்பளவு 700 8,249 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் எண்ணிக்கை 572 தீவுகள் உள்ளன. இவற்றில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 மட்டுமே. இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.
தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானின் மேற்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் ஜாரவாஸ் என்ற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் இன்றும் ஆதிகால மனிதரைப்போன்றே வாழ்கிறார்கள். இவர்களுக்கு மொழி கிடையாது. இவர்கள் மேலாடை ஆடைகள் அணிவதில்லை. இடுப்புக்குக் கீழே இலைதழைகளையே ஆடையாக அணிவார்கள். இவர்கள் அம்பு, வேல் மூலம், விலங்குகளை வேட்டையாடியும், தூண்டில்களால் மீன்களைப் பிடித்து உண்டும் வாழ்கின்றனர்.
இவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அத்தீவுகளுக்கு செல்ல அரசு தடைவித்துள்ளது. இவர்களது எண்ணிக்கை 250 முதல் 400 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்தமான் வரும் வெளிநாட்டு பயணிகள் சிலர், உள்ளூரில் உள்ள சிலர் மூலம் சட்டவிரோதமாக ஜாரவாஸ் பழங்குடியினர் வசிக்கும் தீவுகளுக்குச் சென்று வருவது அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து சமீபத்தில் மத்திய அரசு விரிவாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சேவு John Allen Chau (வயது 27) என்ற கிறிஸ்துவ மத போதகர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன், ஜாரவாஸ் பழங்குடியினர் வசிக்கும் தீவுக்குச் சென்றார். அப்பழங்குடியினரிடையே கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கோடு அவர் சென்றார்.
அவரை பழங்குடியினரின் தீவுக்கு அருகில் இறக்கிவிட்ட மீனவர்கள், உடனே திரும்பிவிட்டனர். ஏனென்றால், பழங்குடியினர், பிறரை பார்த்த மாத்திரத்தில் பயத்தில் அம்பு எய்தி கொன்றுவிடுவார்கள்.
ஆனால் இந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் மத போதகர், ஜான் ஆலன் சேவு அந்தத் தீவுக்குள் நுழைய முயன்றார்.
அவரைப் பார்த்ததுமே பழங்குடியினர் அம்பு எய்தி கொன்றுவிட்டனர்.
இதே போல கடந்த 2016ம் ஆண்டும் ஒரு அமெரிக்கர் இப்படி ஆதிவாசிகளின் தீவுக்குள் அத்துமீறி நுழைய அவரும் கொல்லப்பட்டார். தங்கள் பகுதிக்குள் அத்துமீறுபவர்களை அம்பு எய்தி கொன்று கடலில் வீசுவதை பழங்குடியினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.