சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாண அவைக்கு மகளுடன் சென்ற பெண் உறுப்பினரை வெளியேற்றிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸல் மாகாண கிரீன்ஸ் கட்சி உறுப்பினர் Lea Steinle தமது மகளுடன் அவைக்கு சென்றதால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமை மாலை பாஸல் மாகாண அவை கூடியுள்ளது. சிறிது நேரத்தில் அவையில் சலசலப்பு ஏற்பட்டு அது கூச்சலுக்கு வழிவகுத்துள்ளது.
இதன் காரணம் குறித்து ஆராய்ந்த கவுன்சில் தலைவர் Remo Gallacchi விவகாரத்தை புரிந்துகொள்ளாமல், உறுப்பினர் Lea Steinle-ஐ உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அவை எனவும், நாம் மட்டுமே இந்த அவையில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மட்டுமின்றி அப்போது நடந்த வாக்கெடுப்பிலும் Lea Steinle கலந்துகொள்ள முடியாமல் போனது.
இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக கூறிய Lea Steinle, இதுபோன்ற நிலை பாஸல் மாகாண வரலாற்றில் ஏற்பட்டது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர் Lea Steinle-ஐ வெளியேற்றியதால் அவையில் இருந்த உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் அவை அலுவல்கள் சிறிது நேரம் ஸ்தம்பித்தது. இதனையடுத்து தமது முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட Gallacchi, அவை உறுப்பினர் Lea Steinle-ஐ அவைக்கு திரும்ப பணித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினருக்கு முக்கிய விவகாரத்தில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது என கிரீன்ஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.