மீன் குழம்பு மிக சுவையாக செய்வது??

மீன் குழம்பு நிறைய வகையில் செய்யலாம். தேங்காய் அரைத்துப் போட்டும் செய்யலாம்,தேங்காய் பால் ஊற்றியும் செய்யலாம். சில வீடுகளில் தேங்காய் போடாமலும் செய்வார்கள்.எப்படிச் செய்தாலும் மீன் அதன் சுவையைத் தனித்துக் காட்டும்; இந்த மீன் குழம்பில்சாம்பாருக்குப் போடும் புளி போடாமல் குடம்புளி போட்டுச் செய்துள்ளேன். டிபார்ட்மெண்ட்ஸ்டோரில் கேட்டால் கிடைக்கும்; குடம்புளியின் சுவை மிக வித்தியாசமான மணத்துடன் இருக்கும். குழம்பிற்குத் தனிச் சுவையைக் கொடுக்கும். கேரளாவில் அனேகம் வீடுகளில் குடம்புளி இட்டுச்செய்வார்கள். மண் சட்டியில் செய்யும் மீன் குழம்பிற்குத் தனி சுவையுண்டு. உடனே சாப்பிடுவதைவிட மீனில் புளி, உப்பு, காரம் நன்றாக இறங்க 4 அல்லது 5 மணி நேரமாகும். அதன் பிறகு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மீன் -1 கிலோ , தேங்காய் – 1/2 மூடி ,குடம்புளி -2. புளியைக் கரைக்காமல் அப்படியே போட்டுக் கொள்ளவும்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,பூண்டு – 4 பல்,சின்ன வெங்காயம் -4,ஜீரகம் -1/2 தேக்கரண்டி,தக்காளி – 1 நான்காக வெட்டிக்கொள்ளவும்,மாங்காய் – 4 துண்டுகள்,மிளகாய்த் தூள் – 3 மேசைக் கரண்டி,தனியா தூள் – 1 தேக்கரண்டி,மஞ்சத்தூள் -1/2 தேக்கரண்டி,உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு சின்ன வெங்காயம் -4 பொடியாக அரிந்து கொள்ளவும் தேங்காய் எண்ணெய் – 2 மேசைக் கரண்டி வெந்தயம் – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
மீனை உப்புப் போட்டுச் சுத்தம் செய்து கொள்ளவும்; புளியைத் தண்ணீரில் ஊற போட்டுக் கொள்ளவும்; அதன் பின் தேங்காய், வெங்காயம், ஜீரகம், இஞ்சி, பூண்டு, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு மீன் சட்டியில் அரைத்த தேங்காய் விழுது, ஊற வைத்த புளி, மாங்காய், தக்காளி, இவற்றுடன் உப்புப் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்; மாங்காய் வெந்து மசாலா பச்சை வாசனை போனவுடன் மீனைப் போடவும், மீன் போட்டு 5 நிமிடம் ஆனவுடன் அடுப்பை அணைத்து விடவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலைபோடவும். வெங்காயம் ப்ரௌன் கலராக மாறியதும் குழம்பின் மேலே இதை ஊற்றவும். மீன் குழம்பு தயார்; இதனுடன் மரவள்ளிக் கிழங்கு வேக வைத்து சாப்பிட மிக நன்றாக இருக்கும்.