தூத்துக்குடியைச் சேர்ந்த அமுமுக கட்சி நிர்வாகி கோவையில் காணாமல் போன வழக்கில் 50 நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவைக்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அமுமுக நிர்வாகி ஜெயவேணு காணாமல் போன வழக்கில் 50 நாட்களுக்கு பிறகு அவரது உறவினரும் நண்பனுமாகிய ராஜேஷ் என்பவரை துடியலூர் போலிசார் கைது செய்துள்ளனர். மது போதையில் சுத்தியலால் தலையில் அடித்து கொன்று அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேணு. இவர் அமுமுக கட்சியில் நகரச் செயலாளரக உள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனர். இந்நிலையில் கோவை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல கடந்த அக்டோபர் 1ம் தேதி கோவைக்கு வந்துள்ளார். வந்தவர் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பாத்தைத் தொடர்ந்து அவரது அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் கோவைக்கு தேடி வந்துள்ளனர். இங்கு வந்து அவரது நண்பர்களிடன் விசாரித்தபோது மீண்டும் தூத்துக்குடிக்கே ஜெயவேணு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து எங்கு தேடியும் ஜெயவேணு கிடைக்கதாதால் மீண்டும் கோவைக்கு வந்து துடியலூர் காவல்நிலையில் ஜெயவேணுவின் மனைவி ஜெயவேணுவை காணவில்லை என்ற புகார் அளித்தார். மேலும் அதில் தனக்கு அவரது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து வரப்பாளையத்தில் தங்கியிருந்த சுரேசிடம் ஜெயவேணுவின் உறவினர்கள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக கூறியுள்ளார். இதனால் மீண்டும் துடியலூர் காவல்நிலையத்தில் சுரேசை அழைத்து விசாரிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதற்குள் அன்று இரவே சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து அவர்களுடன் இருந்த அவரது நண்பனும் உறவினருமான ராஜேசை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த பிளம்பர் வேலை செய்து வரும் ராஜேஷ் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு புனேவில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவைக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஜெயவேணுவுடன், ராஜேஷ் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது நண்பரான சுரேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மூவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணு ராஜேஷை கண்ணத்தில் அறைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் இருந்த சுத்தியை எடுத்து ஜெயவேணுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயவேணு பலியானார். கொலையை மறைக்க முடிவு செய்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் தங்களது இருசக்கர வாகனத்தில் ஜெயவேணுவின் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 250 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக ராஜேஷ் கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக கிணற்றில் உள்ள ஜெயவேணு உடலை வெளியே எடுத்துக் கொடுக்க வேண்டும். மேலும் இக்கிணற்றில் ராஜேஷ் கொலை செய்த மேலும் உடல்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.