ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
விசாரணைகளின்போது முக்கிய சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அவை வெகு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளையடுத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா கடந்த மாதம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், இக்குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய பிரஜையொருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
நாலக சில்வாவுடனான தொலைபேசி உரையாடலொன்றையடுத்து ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் முக்கிய அரசியல் கட்சி ஒன்றும் அதனுடன் இணைந்த மற்றுமெரு அரசியற் கட்சி ஒன்றின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.