உயிருக்கு போராடிய மனைவி..காப்பாற்ற சென்ற கணவன் பரிதாப பலி!

தமிழகத்தில் மின்சாரம் தாக்கிய மனைவியை கணவன் காப்பாற்றச் சென்ற போது, கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து இருக்கும் தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த புனிதா(29) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இரண்டு பேரின் வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை துணி துவைத்த புனிதா அதை உலரவைப்பதற்காக வீட்டின் பின்றம் இருக்கும் இரும்பு கம்பியில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் போட்டுள்ளார்.

ஆனால் அந்த கம்பியில் மின்சாரம் இருந்ததால், அதை அறியாமல் புனிதா ஈரமான துணியை போட்டுள்ளார்.

இதனால் கம்பியில் இருந்த மின்சாரம் அவர் மீது பாய அலறியுள்ளார். மனைவியின் சத்தத்தைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த கணவர் சேகர் உடனடியாக ஓடி வந்து அவரைப் பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த கம்பியை அவர் மிதித்துள்ளார்.

இதில் பலமாக மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கிவீசப்பட்ட சேகர் கீழே விழுந்து மயக்கமானார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்தி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சேகர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியைக் காப்பாற்றிய கணவன் அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.