ஒருவேளை உணவுக்கு தமிழர்கள் செய்யும் செயல்: கண்கலங்க வைக்கும் புகைப்படம்

தமிழகத்தின் வடகாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் அடுப்பு அணையாமல் இருக்க அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் தார்ப்பாயை ஏந்தி நிற்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர்.

என்னதான் நிவாரணப் பொருட்கள் சென்றாலும், ஊருக்கே சோறு போட்ட மக்கள் இன்று ஒரு வாய் சோற்றுக்கு தவித்து நிற்கின்றனர். குக்கிராமங்களுக்கு முழுமையான நிவாரணம் இதுவரை சென்றபாடில்லை.

கூரை வீடுகளை கஜா புயல் சுருட்டிய நிலையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவை சமைத்து மக்கள் தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர். ஆனால் மழை இன்னும் தொடர்வதால் நிலைமை கொடூரமாகியுள்ளது.

அப்படித்தான் நாகை மாவட்டம் வடகாடு கிராமத்தில் மக்களுக்கு உணவு சமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் மக்கள் திணறினர். இதனயைடுத்து அடுப்பில் நெருப்பு அணையால் இருக்க நான்கைந்து பேர் சுற்றி நின்று தார்ப்பாயை ஏந்தி பிடித்தனர்.

உணவு இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு மக்கள் உணவு சமைத்தனர். இதுபோன்ற புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குவதாக சமூக வலைத்தளவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.