அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டும்: ஈரான் ஜனாதிபதியின் பரபரப்பு பேச்சு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும் என ஈரான் நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ எனும் அமைப்பின் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் சுமார் 80 நாடுகளில் இருந்து 350 இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள், மூத்த கல்வியாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கலந்துகொண்டு முதல் ஆளாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

‘அமெரிக்கா நமது மதத்திற்கும், இந்த மதத்தில் உள்ள எதிர்கால தலைமுறையினருக்கும் எதிராக உள்ளது. நாம் இவர்களுக்கு எதிராக நிச்சயமாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக உலக இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசுகளுக்கு எதிராகவும் சவூதி மக்களுடைய நலன்களை பாதுகாக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை செய்ய நாங்கள் 450 பில்லியன் டொலர்களை எல்லாம் கேட்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இதை கடமையாக நாம் கருத வேண்டும். வெறும் வாய்மொழியாக மட்டும் இல்லாமல், கூட்டு செயல்பாட்டினால் இந்த கடமை அமைய வேண்டும்.

சவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.