பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் நின்று துவம்சம் செய்த பெண் பொலிஸ் அதிகாரி!

ஆசிய நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டு வெற்றிகண்ட பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தவர் சுஹாய் அஜிஸ் தல்பூர் என்ற பெண் பொலிஸ் அதிகாரி.

அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த 3 தீவிரவாதிகள் திடீரென்று தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

பதிலுக்கு, சுஹாய் அஜிஸ் தலைமையில் இருந்த காவல்துறையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

குறித்த துணிச்சல் மிக்க நடவடிக்கையால் பொலிஸ் அதிகாரி சுஹாய் அஜிஸ் பலரது கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.

தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகண்ட அவரை பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அவர் பெண் என்பதற்காகவும், தீவிரவாதிகளை வீழ்த்தினார் என்பதற்காகவும் மட்டும் அவரை அங்குள்ள மக்கள் கொண்டாடவில்லை.

அவர் வளர்ந்த விதமும், கடின உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றதாகவும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், தொடர்ந்து நேர்மையாகப் பணிபுரிந்து பாராட்டுகளைக் குவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.