நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
“மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம்.
அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டும் போது, கட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.
225 பேரைக் கொண்ட சபையில் யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர் பிரதமராக இருப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார்.