அந்தமானில் இறந்த அமெரிக்கர் உடல் கிடக்க வாய்ப்பு இல்லை?

அந்தமான் தீவுகளில் உள்ள செண்டலீஸ் ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க மத போதகர் உடல் கிடைக்க வாய்ப்பு இல்லை என அந்தப் பகுதி ஆர்வலர் தெரிவித்துள்ளார்..

அந்தமானில் உள்ள செண்டலீஸ் இன மக்கள் வெளி உலக தொடர்பு இன்றி வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேராத யார் தீவுக்குள் வந்தாலும் செண்டலீஸ் ஆதிவாசிகள் உடனடியாக அம்பு எறிகின்றனர். சுனாமியின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறிந்து ஆய்வதற்காக அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் மீது அந்த மக்கள் சரமாரியாக் அம்பு எய்ததால் பாதிப்பு குறித்த விவரங்கள் இன்று வரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மக்களை பாதுகாக்கப்பட்ட பழங்குடியினராக இந்திய அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஜான் ஆலன் சவு என்பவர் மீனவர்கள் உதவியுடன் சட்ட விரோதமாக அந்த தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்களை கிறித்துவ மதத்துக்கு மாற்ற அவர் சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு சென்றதுமே செண்டலீஸ் இன மக்கள் அவரை அம்பு எய்து கொன்று உடலை இழுத்துச் சென்றுள்ளனர். அவரை அங்கு கொண்டு சென்ற மீன்வர்கள் இதைக் கண்டு உயிர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

மரணமடைந்த அமெரிக்கரின் உடலை மீட்டெடுக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டது.

இது குறித்து ஆதிவசிகள் ஆர்வலரான பங்கஜ் செகாரியா, “சவுவின் உடலை மீட்டெடுப்பது என்பது ஒரு அபாயகரமான முயற்சி ஆகும். அந்த தீவுக்குள் யார் செல்வதும் சரி இல்லை என்பது எனது அபிப்ராயம் ஆகும். இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகவும் குழப்பங்கள் உண்டாகும்.

அத்துடன் சவுவின் உடலை பத்திரமாக மீட்க வாய்ப்பே இல்லை என தோன்றுகிறது. அவ்வாறு முயல்வது செண்டலீஸ் மக்கள் மற்றும் அங்கு செல்பவர்கள் ஆகிய இருவருக்குமே அபாயமான செயலாகும்” என தெரிவித்துள்ளார்,