மாத்தறை எலவெல்ல வீதியில் மூன்று மாணவர்கள் இணைந்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி மற்றுமொரு மாணவனை கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. பகுதி நேர வகுப்பு முடிந்து சென்று கொண்டிருந்த மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திஹாகொட பிரதேசத்தில் வசித்து வந்த மாத்தறையில் உள்ள பிரதான பாடசாலையில் 13 ஆம் ஆண்டில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றைய மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எந்த காரணத்திற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பியோடியுள்ளனர். இவர்களை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.