இசைப்பிரியாவை போராளியாகச் சித்திரித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை அறிவிப்பு!!

‘இசைப்பிரியாவை ஒரு பெண் ஊடகவியலாளராக சர்வதேசமும் அதன் ஊடகங்களும், புலம்பெயர் தமிழ்மக்களும் உள்வாங்கி, சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் குறியீடாக அவரை வெளிக்கொணர்ந்த சூழ்நிலையில், அவரையும் ஒரு போராளியாக அறிவித்து வணக்க நிகழ்வை சிலர் ஏற்பாடு செய்வது சந்தேகத்தை உருவாக்குகின்றது’ என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை தெரிவித்துள்ளது.

‘இறுதி நாட்களில் வீரச்சாவடைந்த நூற்றுக்கணக்கான தளபதிகள், பல்லாயிரம் போராளிகள் இருக்கையில் பதினொரு பேரை மாத்திரம் மாவீரர்களாக அறிவித்து ஒருசிலர் வணக்கம் செலுத்துதல் முறையாகாது என்பதோடு, இறுதிநாட்களில் உரிய முறையில் அறிவிக்கப்படாத மாவீரர்களுக்கு, அவர்களுக்கான எந்தவொரு தரநிலையும், அங்கீகாரமும் வழங்காமல் வெறுமனே சிறப்புத்தளபதிகளாக அறிவிக்கும் நிலைப்பாட்டையும் சுவிஸ்கிளையானது ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றும் சுவிஸ் கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளை பொறுப்பாளர் வி.ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை சிரமேற்று இலட்சியத்தின் வழி பணி தொடர்வோம்’ என்றதலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மாவீரர்கள் எமது மனங்களில் நீறாத நெருப்பாக பூத்துக்கிடப்பவர்கள். தன்னலமற்ற புனித இலட்சியம் ஒன்றிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த மாவீரர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தங்களது தோள்களிலே சுமந்து இருளகற்றும் வெளிச்சங்களாக மண்ணுக்குள்ளே விதையாக வாழ்பவர்கள். இன்று தமிழர்களின் விடுதலையும், அவர்களின் வீரஞ்செறிந்த போராட்ட அனைத்துலகெங்கும் பேசப்படுவதற்கு மாவீரர்களின் உன்னதமான உயிர்த்தியாகங்களும், மக்களின் அர்ப்பணிப்புக்களுமே அடிப்படையான காரணமாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மானமறவர்களை, கல்லறைத் தெய்வங்களை எம் நெஞ்சங்களிலிருத்தி, நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்தவும் எழுச்சிகொள்ளவும் உலகத் தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுச்சிகொண்டுள்ள மாவீரர் வாரநாட்களில் காலத்திற்கேற்ப ஓரினமாக ஓரணியில் ஒன்றிணைந்து பயணிக்கும் இத் தருணங்களை மறந்து, மாவீரர் தியாகங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டியவர்களே தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்குள் ஒரு சிலரது தன்முனைப்புத் தன்மையுடன் இன்று தமிழீழ விடுதலைப் போரின் தூண்களாக நின்று இறுதிப்போரில் வீரகாவியம் படைத்த சில தளபதிகளை மட்டும் முதன்மைப்படுத்தி முதற்கட்டம் வீரவணக்கம் செலுத்தவுள்ளது என்பது விடுதலைவேட்கையோடும், தம்சக போராளிகளோடும், தாம் நேசித்த மக்களோடும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது அடிபணியாது தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் இலட்சியங்களை சிதைக்கும் செயற்பாடாகவே நாம் பார்க்க முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆயுதப்போராட்டமானது தாயகத்தில் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் புலம்பெயர் நாடுகளில் வசித்து வருவதோடு அமைப்புசார் செயற்திட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவது தாங்கள் அறிந்ததே. அந்தவகையில் சிறிலங்காச் சிறைகளில் வாழும் போர்க்கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் முகமாகவும், அனைத்து நாடுகளிலுமுள்ள கிளைகளுடன் ஒன்றிணைந்து பயணித்து இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டு எமது ஒத்துழைப்பிலும், முன்னைநாள் போராளிகளின் ஒருங்கிணைப்பிலும் சுவிசில் உருவாக்கப்பட்டதே சுவிஸ் போராளிகள் கட்டமைப்பாகும்.

இதற்கமைவாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையினை, போராளிகள் கட்டமைப்பு சுவிசின் புதிதாக தெரிவான நிர்வாகமானது சந்தித்து கலந்துரையாட வேண்டுமென கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சொலத்தூர்ண் மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு மண்டபத்தில் ஒன்றுகூடி பல விடயங்களை கலந்து பேசியிருந்தோம்.

இதன்போதுதான் போராளிகள் கட்டமைப்பின் நிர்வாகத்தின் சில அங்கத்தவர்களால் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற இறுதிக்காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்த தளபதிகளையும், மாவீரர்களையும் தாங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதனையடுத்து, அதனால் ஏற்படும் சாதக, பாதக விடயங்களை இரு தரப்பினரும் இணைந்து ஆராய்ந்திருந்தோம். இதன் போதுதான் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் விடயத்தில் அவர்களது நிலைப்பாடானது எமக்கு அதிர்ச்சியைத் தருவதும், எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக உணரப்பட்டு அவ்விடயமானது எங்களால் மறுக்கப்பட்டதோடு, மாவீரர்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதாயின் அதற்கான அமைப்புசார் ஒழுங்குமுறைகளுடனும், பொறுப்புக்கூறலுடனும் இருக்கவேண்டும் என எமது முடிவைத் தெரிவித்திருந்தோம்.

இவ்முடிவில் உடன்பாடு இல்லாததன் காரணத்தால் அனைத்துலக தொடர்பகத்துடன் கதைக்க கேட்டதற்;கிணங்க, அனைத்துலகத் தொடர்பகத்தினால்; 03.11.2018 அன்று பெல்ஜியத்தில் அனைத்து நாடுகளின் பொறுப்பாளர்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் தாங்கள் வரமுடியாது என மறுத்திருந்ததுடன் பதினொரு தளபதிகளை உறுதிப்படுத்துவது சார்ந்த விளக்கத்தை எப்போது வேண்டுமானாலும் சுவிஸ் போராளிகள் கட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. ரவி அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் அனைத்துலகத் தொடர்பகத்தை சேர்ந்த இருவர் திரு.ரவி அவர்களை சந்தித்து இறுதிச்சமரில் வீரகாவியமானவர்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் அனைத்துலகத்திடமோ, கிளைகளிடமோ இல்லை எனவும், இதற்காக பல்வேறு படையணிப்போராளிகளை நாங்களும் இணைத்துத்தருவது என்றும் இதற்காக ஒரு குழுவை உருவாக்கி, இத்தளபதிகளோடு நின்று களமாடி வீரச்சாவடைந்தவர்கள் விபரங்களையும் முடிந்தளவு சேகரித்து இதற்கான பட்டியலைத் தயாரித்து இறுதிவரை களத்தில் நின்று, இன்று புலம்பெயர்ந்து வாழும் தளபதிகள், கூடநின்று போராடிய போராளிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரூடாகவும் அவர்களது வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டு அனைத்துலக ரீதியாக எல்லாநாடுகளிலும் ஒருசேர மிகப்பெரும் மீள் எழுச்சிநிகழ்வாக செய்வதற்கான சகல ஒழுங்குகளையும் செய்து தரலாம் எனவும் கூறப்பட்டது. ஆனாலும் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்தவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாது, இதனை எழுத்து மூலமாக தரமுடியுமா என திரு.ரவி அவர்களால் கேட்கப்பட்டபோது அதைத் தருவதாக உறுதிமொழியும் அவருக்கு அளிக்கப்பட்டது. 01

இதன் பின்னரும் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று எமது அலுவலகத்தில் சந்திப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அச்சந்திப்பானது ஐந்து மணித்தியாலங்களைத் தாண்டியும் சுமுகமாக நடைபெற்றது. சந்திப்பில், 2009 இறுதி யுத்தத்தினால் வீரச்சாவடைந்த மாவீரர்களில் குறிக்கப்பட்ட பதினொரு தளபதிகள் மற்றும் போராளிகள் சார்ந்த விடயமானது கலந்துரையாடப்பட்டது. எங்களால் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்வாங்கிய போதும் போராளிகள் கட்டமைப்பு நிர்வாகமானது தங்களால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த பதினொரு தளபதிகளையும் இம்முறை உறுதிப்படுத்தி மாவீரர்பட்டியலில் சேர்த்து வீரவணக்க நிகழ்வும் நடாத்துவதில் உறுதியாக இருந்ததோடு, இந்நிகழ்வுக்கு சுவிஸ் கிளையையும்; கலந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டது. இவ்வளவு விட்டுக்கொடுப்பிலுமளூ; இவர்களது கடும்போக்கிலும், பல விடயங்களுக்கு விளக்கம் கேட்டிருந்தும் இன்றுவரை கொள்கைரீதியான சரியான பதில்கள் எமக்குத்தராது வணக்க நிகழ்வுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதோடு, அவசர அவசரமாக அறிக்கைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இறுதியாக கடந்த 22.11.2018 வியாழக்கிழமை அன்று எமது பேர்ண் அலுவலகத்தில் சந்திப்பொன்று திரு ரவி அவர்களுடன் நடைபெற்றது. அதிலும் அனைத்து விடயங்;களும் விளக்கமாக கதைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்நிகழ்வை நிறுத்தி, அனைவருமாய் இணைந்து போரின் இறுதி நாட்களில் மாவீரரான அனைத்து போராளிகளினதும் விபரங்களைத் திரட்டியும் அதனை உரிய முறையில் உறுதிப்படுத்தியும் அனைத்துலக ரீதியாக மாபெரும் மீள் எழுச்சியோடு இந்நிகழ்வை செய்வோம் என எம்மால் வினயமாகக் கேட்;கப்பட்டதற்கு, அதற்கான பதில் சொல்லும் அதிகாரம் தனக்கு இல்லையென திரு ரவி அவர்கள் குறிப்பிட்டதோடு, ஏனையவர்களுடன் கதைத்து பதில் தருவதாக தெரிவித்திருந்தாலும், ஆனால் அவர் அவர்களின் திட்டத்தில் உறுதியாகவே இருந்தார்.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, போராளிகளே!

நாம் எந்த அடிப்படையில் அவற்றை நிராகரித்திருந்தோம் என்பதனை மாவீரர் குடும்பங்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள், ஆதரவாளர்கள் என தமிழ்மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த எண்ணுகின்றோம்.

– தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையினால் மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களையும் உள்ளடக்கி ‘நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு’ 2012ம் ஆண்டிலிருந்து எழுச்சி நிகழ்வாகவும்;, சுவிஸ் தமிழீழத் தேசிய மாவீரர் நிகழ்வில் அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தூபி அமைத்தும் வணக்கம் செலுத்தி வருகின்றோம்.

– தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்றம்பெற்று இறுதியாக முள்ளிவாய்க்கால் போரில் மாவீரரான அனைத்து மாவீரர்கள் விபரங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களது வரலாற்றை உள்ளடக்கியதான வரலாற்று ஆவணமொன்றை கட்டம் கட்டமாக வெளியிடுவதற்கான மிகப்பெரும் பணியொன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகின்றோம். அதனடிப்படையில் எதிர்வரும் மாவீரர்நாளில் முதற் கட்டமாக 27.11.1982 இல் இருந்து 1995ம் ஆண்டு வரையான மாவீரர் விபரங்களை உள்ளடக்கியதான மாவீரர் பெட்டகம் ஒன்றினையும் வெளியிட உள்ளோம்.

– முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நாட்களான 2009 மே 16,17,18,…களில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் உரியமுறையில் வெளிக்கொணர்ந்து வணக்கம் செலுத்துவதற்கு நாம் எப்போதும் தடையாய் இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை.

– மேற்குறிப்பிட்ட இறுதி நாட்களில் வீரச்சாவடைந்த நூற்றுக்கணக்கான தளபதிகள், பல்லாயிரம் போராளிகள் இருக்கையில் குறிப்பிட்ட பதினொரு பேரை மாத்திரம் மாவீரர்களாக அறிவித்து வணக்கம் செலுத்துதல் முறையாகாது என்பதோடு, இறுதிநாட்களில் உரிய முறையில் அறிவிக்கப்படாத மாவீரர்களுக்கு, அவர்களுக்கான எந்தவொரு தரநிலையும், அங்கீகாரமும் வழங்காமல் வெறுமனே சிறப்புத்தளபதிகளாக அறிவிக்கும் நிலைப்பாட்டையும் சுவிஸ்கிளையானது ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு அதை அறிவிப்பதற்கான உரிமையும், பொறுப்பும் சுவிஸ்கிளைக்கு இல்லை.

– தாயகத்தில் உரிமைகோர முடியாத சூழலில், வணக்க நிகழ்வு நடாத்த உள்ள தளபதிகள் சிலரின் பெற்றோர்கள், துணைவியர்கள், சகோதர சகோதரியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த சூழ்நிலையிலும், இசைப்பிரியாவை ஒரு பெண் ஊடகவியலாளராக சர்வதேசமும் அதன் ஊடகங்களும், புலம்பெயர் தமிழ்மக்களும் உள்வாங்கி, சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் குறியீடாக அவரை வெளிக்கொணர்ந்த சூழ்நிலையில், அவரையும் ஒரு போராளியாக அறிவித்து வணக்க நிகழ்வை செய்வது சந்தேகத்தை உருவாக்குகின்றது.

– எந்தவொரு கால அவகாசங்;களும், பதில்களும் தராமல் அவசர அவசரமாக நிகழ்வு ஏற்பாடுகள் செய்வதும், 2009க்கு பின்னரான காலப்பொழுதில் பல சவால்களையும் எதிர்கொண்டு தேசியத்தலைவரின் சிந்தனையின்படி உறுதியோடு பயணிக்கும்; சுவிஸ்கிளையை குற்றம் சாட்டுவதானது, முன்னரேயே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலில் நடைபெறுவதாகவே இதனை கருதத் தோன்றுகிறது.

– அம்மாவீரர்களை நினைவுகூரவேண்டிய முதல் காலப்பகுதியாக மே18 உள்ளபோதும், மாவீரர்நாளுக்கு இரு நாட்கள் முன்னர் செய்வதற்கான இவ் அவசரமான ஏற்பாடானது ஏன் என்ற கேள்வியை தருவதோடு, அம்மாவீரர்களையும் அவர்களது அதியுச்சமான தியாகங்;களையும் கொச்சைப்படுத்தி மலினப்படுத்தும்; விடயமாகவும் உள்ளது.

02

– இன்று தேசியத்தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட இராணுவ நிலைகள் அகற்றப்பட்டு அவர்களது இறுதிக்காலக் கடமைகளுடன் மட்டும் வைத்து மாவீரர்களை உறுதிப்படுத்த முனைந்துள்ளார்கள். வரலாறானவர்களை வரலாறு மறந்துவிடும் எனவேதான் நாம் செய்கின்றோம் எனச் சொல்கின்றார்கள். அவ்வாறாயின் தேசியத்தலைவரால் வழங்கப்பட்ட இராணுவ நிலையை நீக்கும் இதன் வரலாறுதான் என்ன? வரலாறான மாவீரர்களை நாம் கவனிப்பாரற்று இருக்கின்றோம் என்றால், இவர்கள் எத்தகைய வரலாற்றை திணிக்கமுயல்கிறார்கள். தளபதிகள், போராளிகளின் வீரம் செறிந்த வரலாறுகளும் அதனுடாக மதிநுட்பமாக தேசியத்தலைவர் அவர்களால் நிலைகளை வழங்கி வெளிபடுத்திய போரியல் இராணுவ சமநிலையும் வரலாற்றில் அழிக்கப்படுகிறதா?

– இவ்வாறான சூழலிலும் தன்னிச்சையாக நிகழ்வை நடாத்தவுள்ளதுடன், ‘சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும் போராளி கட்டமைப்பினரும் இணைந்து நடாத்தும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு’ என மாவீரர்நாள் நிகழ்வுக்கான அழைப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் அனுமதியின்றி பயன்படுத்தியும் உள்ளார்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன் போராளிகள் கட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிகழ்வுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனையும் அறியத்தருவதோடு, தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையையும் வழிநடத்தலையும் ஏற்று தேசியத்தலைவர் அவர்களால் எந்த நோக்கின் அடிப்படையில் சுவிஸ்கிளை உருவாக்கம் பெற்றதோ, அதே கொள்கைகளின் அடிப்படையில் தம்மை சந்தித்த முன்னைநாள் போராளிகள் அனைவரையும் அரவணைத்து, அவர்களது வேண்டுகைகளை ஏற்று, அவர்களையும் இணைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளையானது செயற்பட்டு வருகின்றது என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

– அனைத்திற்கும் மேலாக சுவிஸ் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுக்கான வேலைத்திட்டமிடல் 19.08.2018 அன்று நடைபெற்றபோது எமது அழைப்பை ஏற்று கலந்து கொண்ட போராளிகள் கட்டமைப்பின் இரு முக்கிய நிர்வாக உறுப்பினர்கள், பல வேலைப்பகிர்வுகள் சார்ந்து பேசி பொறுப்புக்களை எடுத்த போதிலும் கிளையின் 25இற்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் இருந்த சந்தர்ப்பத்தில்; கூட குறித்த பதினொரு தளபதிகளுக்காக தங்களால் முன்னெடுக்கப்படவுள்ள வணக்கநிகழ்வு சார்ந்த விடயங்கள் எதனையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதனையும் இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுகின்றோம்.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ்மக்களே!

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு அன்று தொடக்கம் இன்றுவரை உலகத்தமிழர்களோடு ஒன்றிணைந்து வலுச்சேர்த்தீர்கள். நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பும் முழுமையான ஆதரவுமே தமிழர் உரிமைப்போராட்டத்தினை இந்தளவு தூரத்திற்கு நகர்த்திச்சென்றது. தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாகக் கொண்டு நாம் செயற்படவேண்டியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமைப்போராட்டங்களையும், தமிழர் ஒற்றுமையினையும் சீர்குலைத்து, சிங்கள இனவாத அரசானது தமிழினவழிப்பையும் தனது கறைபடிந்த வரலாற்றுப்பக்கங்களையும் மறைக்க முற்படுகின்றது. இந்நிலையில் இருந்து விடுபடுவதற்கும், தாயகத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளை பாதுகாப்பதற்கும், அழிவின் விளிம்பில் நிற்கும் எம் தாயகத்தை மீட்டெடுப்பதற்கும், எம் வேர்களை பலப்படுத்தி விழுதுகளாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியொன்றில் நாம் இன்று நிற்கின்றோம்.

எமது போராட்டம் அறத்தின் வழி; முன்னெடுக்கப்பட்டது. நெறிதவறாமல் நேர்மையுடன் வழிநடாத்தப்பட்டவர்கள் நாம். இந்த நாட்டு சட்ட வரைமுறைமைக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளன. ஈழத்தமிழருக்கு சுதந்திரத் தமிழீழம் ஒன்றே இறுதித்தீர்வு என்ற இலக்;கில் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையானது எந்த சமரசத்தையும் செய்ய மாட்டாது என்பதோடு எந்த தருணத்திலும் எப்படியான இடர்கள் சூழ்ந்தாலும் தமிழீழ விடுதலை என்ற இலக்கில் இருந்து வழுவிச்செல்லாது இறுதி இலக்கை அடையும் வரை நம்பிக்கையோடும் உறுதியோடும் எமது உரிமைப்போராட்டத்தினை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்றும் உறுதி கூறுகின்றோம்.’