இலங்கை பொலிஸாருக்கு அவசர அறிவித்தல்!

மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து காவல்நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லா காவல்நிலையங்களும், எந்த அவசர சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில், நோயாளர் காவு வண்டிகள், தீயணைப்பு வாகனங்களுடன், அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்ட அரசாங்கத் தரப்புக்கும், புதிய அரசாங்கத் தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என்பதாலேயே இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தக் கோரி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியமான நகரங்களில் பேரணிகள், கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

நேற்று கண்டியில் ஒரு பாரிய கூட்டத்தை நடத்திய ஐதேக மேலும் பல நகரங்களில் இத்தகைய பேரணிகளை நடத்தவுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கும், கண்டிக்கும் பாரிய வாகனப் பேரணிகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்பும், அடுத்தவாரம், பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலிலேயே,ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள் கூட்டங்களை நடத்தும் போது, இருதரப்புகளும் மோதிக் கொள்ளலாம் என்பதால், காவல்துறையினர் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.