பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் தனது பிரசவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
கர்ப்ப காலத்திலும் நான் உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன்.
உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன். நான் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆகவேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, சிறிது நேர யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம்.
எனது பிரசவ அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின் போது நான் உணர்ந்து கொண்டேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமூகமாகவும் இருந்தது.
பிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன்.