திருட்டுக்காதலன் வெறிச்செயல் : கணவன் படுகொலை

கமுதி செட்டியார் பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் ராமசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ஜெயராமன் (37). இவர் மனைவி பொன்னுமணி (23). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.

படுகாயம் அடைந்த ஜெயராமன் கூக்குரல் கேட்டு மாடியில் தூங்கிய அவர் மனைவி ஓடிவந்தார். அதற்குள் ஜெயராமன் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைக்கண்டதும் பொன்னுமணி கதறி அழுதுள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

தகவலறிந்ததும் கமுதி துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தேவசங்கரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. பொன்னுமணிக்கும் எதிர் வீட்டில் வசித்து வந்த செல்வராஜ் மகன் அசோக்குமாருக்கும் திருட்டுத்தொடர்பு இருந்துள்ளது. இதை கணவர் கண்டித்ததால் அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் ஜெயராமனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வீட்டின் ஹாலில் ஜெயராமன் தூங்கச் சென்றதும் திருட்டுக்காதலன் திட்டப்படி கதவை  பொன்னுமணி பூட்டாமல் சாத்தி வைத்து விட்டு மாடியில் சென்று படுத்துக்கொண்டார். இதையடுத்து, திட்டமிட்டபடி அசோக்குமார் நள்ளிரவில் வீடு புகுந்து ஜெயராமனை வெட்டியுள்ளார் என்று தெரிந்தது. இதனைத்தொடர்ந்து கொலையாளி அசோக்குமாரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவர் மதுரை அண்ணாநகர் போலீசில் சரணடைந்துள்ளார். அவரை கொண்டு வந்து விசாரிக்க மதுரைக்கு கமுதி போலீசார் விரைந்துள்ளனர்.