டில்லியின் தென்மேற்கு பகுதியில் ஒரு சிறுவனை கடத்தி கொன்று தின்றதாக எழுந்த சந்தேகத்தில் ஆப்பிரிக்கர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
டில்லியின் தென் மேற்கு பகுதியில் காக்ரோலா என்னும் இடம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பல வீடுகள் வர்த்தக நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து வந்து வசிப்போருக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. உள்ளூர் வாசிகள் சற்றே வசதி குறைந்தவர்கள் ஆவார்கள். இங்கு வசிக்கும் ஆப்பிரிக்கர்கள் இங்குள்ள குழந்தைகளுடன் சற்றே நெருங்கிப் பழகினாலும் அது குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் எழுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள 16 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனதாகவும், அந்த சிறுவனை கடத்திச் சென்ற ஆப்பிரிக்கர்கள் கொன்று தின்று விட்டதாகவும் வதந்திகள் பரவின. அப்போது அங்கிருந்த பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த ஒரு ஆப்பிரிக்க இளைஞரை மூன்று பேர் சூழ்ந்துக் கொண்டுள்ளனர். அவரை அந்த சிறுவனை கொன்று தின்றதாக குற்றம் சாட்டியதால் பயந்து போன அவர் தபிச் சென்று அருகில் இருந்த ஒரு வீட்டினுள் புகுந்துக் கொண்டார்.
அந்த வீட்டில் நைஜீரியா மற்றும் தான்சானியா நாட்டை சேர்ந்த ஆப்பிரிக்கர்கள் வசித்துவருகின்றனர். அந்த வீட்டை சூழ்ந்துக் கொண்ட உள்ளூர் மக்கள் 200-250 பேர் வீட்டை கல்லால் தாக்க தொடங்கி உள்ளனர். மக்களால் துரத்தப்பட்ட ஆப்பிரிக்கர் பின் வாசல் வழியாக ஓடி விட்டார். அங்கிருந்த தான்சானிய பெண்கள் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர். காவல்துறையினர் வந்து கூட்டத்தை கலைத்து அவர்களை மீட்டு பத்திரமாக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறை விசாரணையில் அந்தப் பகுதியில் யாரும் காணாமல் போகவோ கடத்தப்படவோ இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் டில்லியில் வாழும் ஆப்பிரிக்கர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.