பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த 17ஆம் திகதி முதல் பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கினர்.
நாட்டின் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில், லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாரிஸ் உட்பட பல இடங்களில் நடந்த போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது.
பொலிசாரின் தடுப்புகளை தகர்த்த போராட்டக்காரர்கள் சிலர், பொலிசார் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொலிசார் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் போராட்டக்காரர்களை கடுமையாக கண்டித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவமானத்திற்கு உரியவர்கள். பிரெஞ்சு குடியரசில் வன்முறைக்கு இடமில்லை.
பொலிசாரை தாக்கியவர்கள் குறித்து நான் வெட்கப்படுகிறேன். பிற குடிமக்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.