தேசிய அளவில் பிரபலமான கேரளா மாணவி: ஹூக்கா குடிக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

மீன் விற்று கேரளாவில் மிகவும் பிரபலமான மாணவி ஹனான், ஹூக்கா குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் நடுரோட்டில் மீன் விற்று படித்து வந்த மாணவி ஹனான் பற்றி மாத்ருபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு உதவிகளும் வந்து குவிந்தன.

அதேசமயத்தில் சில நபர்கள் ஹனான் குறித்து பல்வேறு அவதூறு செய்திகளை இணையத்தில் பரப்பி வந்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு ‘ஹனான் தைரியமான பெண், கேரளாவின் மகள்’ என பாராட்டினார்.

மேலும், ஹனான் குறித்து அவதூறு செய்திகளை பரப்பிய இருவரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹனான் ஹூக்கா குடிக்கும் வீடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் பாராட்டிய பெண் ரூ.1000 மதிப்புள்ள ஹூக்கா குடிக்கும் ஸ்டைலைப் பாருங்கள்!’ என குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள ஹனான், ‘எடப்பள்ளியில் உள்ள மரியாத் ஹோட்டலுக்கு சினிமா விவாதத்துக்குச் சென்றிருந்தேன்’.

‘அங்கே பலரும் ஹூக்கா குடித்துக் கொண்டிருந்தனர். ‘ஹூக்கா அரேபியர்கள் குடிப்பார்கள். இதைக் குடித்தால் உற்சாகம் பிறக்கும். எந்தவிதமான நிகோடினும் ஹூக்காவில் இல்லை என்று ஒருவர் கூறினார்’.

அதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் நான் அதை குடித்தேன். அங்கிருந்த சிலர் அதனை வீடியோவாக எடுத்தனர்’.

‘அதை வைத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மீன் விற்ற ஒரு பெண், பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதையும், நல்ல ஆடைகள் அணிவதையும் அவர்கள் விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், வீடியோவை பரப்பியவர்கள் தொடர்பாக கொச்சி கமிஷனரிடம் தான் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.