அதிகரிக்கும் அரசியல் குழப்பம்: ஐ.நா. செயலர் இலங்கை விஜயம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விடயம் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அரசியல் கட்சிகள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில், ஐ.நா. செயலர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பிரதமர் மாற்றப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை என அடுத்தடுத்து நடந்தேறிய விடயங்கள், உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறி வருகின்றன.

அரசியல் யாப்பை மீறி இவ்விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென சர்வதேச நாடுகள் குறிப்பிட்டு வருவதோடு, அரசியல் யாப்பையும் சட்டம் ஒழுங்கையும் காக்கும் கடமை ஜனாதிபதிக்கு உண்டென வலியுறுத்தி வருகின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைகள் தொடர்பாகவும் அதிக கரிசனை வெளியிட்டன. இந்நிலையில், ஐ.நா. செயலரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.