திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் தேனிலவிற்காக சென்ற ஹோட்டலில் இரகசிய கமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்தத் தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர். குளியாப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
வழங்கப்பட்ட அதி சொகுசு அறையின் கதவில் இரண்டு துளைகள் காணப்பட்டதாகவும், இதில் ஒன்றில் இரகசிய கமரா மூலம், அறையின் உள்ளே நடந்தவை வீடியோ காட்சிகளாக பதிவிடப்பட்டிருக்கலாம் என புதுமணத் தம்பதியினர் பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஹோட்டல் அறையை பொலிஸார் சென்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது ஹோட்டல் அறை முழுமையாக தென்படக்கூடிய வகையில், கதவில் இரண்டு துளைகள் இடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறைக்கு அடுத்த அறையின் கதவிலும் இதேவிதமான துளைகள் காணப்படுவது தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் தவிர்க்க இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமது ஹோட்டலுக்கு பிரதேசத்தில் நற்பெயர் காணப்படுகின்றது எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமது ஹோட்டலில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு கிடையாதெனவும், ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.