கைகள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த பிரித்தானிய பிரபலம்

பிரித்தானியாவின் பிரபல ரேடியோ தொகுப்பாளர், கைகள் கட்டப்பட்ட நிலையில் லெபனான் நாட்டில் உள்ள அவருடைய வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பிரபல ரேடியோ தொகுப்பாளர் கெவின் ஃபோர்டு, தற்போது லெபனான் நாட்டில் உள்ள ரேடியோ ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு முதலே இவர் ரேடியோ தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு வர தாமதமாகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சகஊழியர்கள், அவருடைய போனிற்கு முயற்சி செய்து பார்த்த பின்னர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து கெவின் இருக்கும் வீட்டிற்கு சென்று பொலிஸார் பார்த்துள்ளனர். அங்கு பின் பக்கமாக கைகள் கட்டப்பட்டு, ரத்தம் வெளியேறிய நிலையில் கெவின் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தகவல் சர்வதேச ஊடங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு, செய்தி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் வேலை செய்து வந்த ரேடியோ நிறுவனம், எங்கள் அன்பான நண்பர் மற்றும் சகஊழியரான கெவின் ஃபோர்டு இறந்துவிட்டதை நாங்கள் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அவருடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

லெபனானில் உள்ள பிரித்தானிய தூதர் கிறிஸ் ராம்ப்ளிங், கெவினின் இறப்பு செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.

இதுபற்றிய பேசியுள்ள பிரித்தானிய செய்தி தொடர்பாளர், கெவின் இறந்தது தொடர்பாக நாங்கள் லெபனான் அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். மேலும் இதுசம்மந்தமாக அவருடைய குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.