திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி….

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுமணத்தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் நந்தகுமார் (20). பிளஸ் 2 முடித்து விட்டு, திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தந்தூரி மற்றும் சைனீஸ் உணவு வகைகளை சமைக்கும் தொழில் செய்து வருகிறார்.

புளியம்பேட்டையைச் சேர்ந்த இவரது மனைவி சத்யப்ரியா (23) பட்டதாரி. இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரையும் பிரித்து பெற்றோர்கள் அவரவர் வீட்டில் வைத்திருந்தனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் சேர்ந்து வெள்ளகோவில் அருகே உப்புபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நந்தகுமார் அப்பகுதியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடைக்கு நந்தகுமார் வராமல் இருப்பதை அறிந்த கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அருகே ஒரு விஷபாட்டிலும் கிடந்துள்ளது.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நந்தகுமார் அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று தாயை சந்தித்து வந்துள்ளார்.

ஆனால் சத்யபிரியாவின் வீட்டிலிருந்து யாரும் வருவதில்லை. இதனால் நந்தகுமார் மீது சத்யபிரிய கோபமாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மனஉளைச்சலால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.