இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்து விட்டதாக உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.முகநூல் நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன், லண்டனில் இடம்பெற்ற விசாரணை ஒன்றின் போது இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளை நீக்காமை ஓர் பாரதூரமான பிழையாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிங்களத்தில் வெளியான குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த முகநூல் பதிவுகள், நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா என தொங் கேள்வி எழுப்பிய போது, ரிச்சர் அலன் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த முகநூல் பதிவுகள் பிரசூரிக்கப்பட்டிருந்தது எனவும் இதனால் உயிர்ச் சேதங்களும் உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாகவும் தொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முகநூல் பதிவுகள் இந்த முரண்பாட்டு நிலைமையை தூண்டி பூதாகரமாக்கியது என்பதனை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா? தொங், முகநூல் நிறுவன துணைத் தலைவரிடம் வினவிய போது ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முகநூல் பதிவுகளை நீக்குமாறு இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் கோரிய போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன அவர் மேலும் வினவியுள்ளார்.அதற்கு முகநூல் பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.
மேலும், சமூக விரோத அடிப்படையிலான பதிவுகள் கிடையாது என முன்னதாக முகநூல் நிறுவனம் வாதிட்டதாகவும் அதனை ஒப்புக் கொள்கின்றீர்களா தொங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் போது இல்லை அதனை ஒப்புக்கொள்ளவில்லை தவறுதலாக இவ்வாறு ஒர் பிழை இடம்பெற்றதாக ரிச்சர்ட் அலன் தெரிவித்துள்ளார்.முகநூல் நிறுவனத்தை நம்ப முடியாது எனவும் சரியான மதிப்பீடுகளை முகநூல் நிறுவனத்தை வைத்து பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதிலளித்த ரிச்சர்ட் அலன், நிறுவனம் பாரதூரமான பிழையொன்றை விட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறான பிழைகளை வரையறுத்துக் கொள்வதே தமது நிறுவனத்தின் பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.சகல மொழிகளிலும் குரோத உணர்வைத் தூண்டும் வார்த்தைகளை கண்டறிந்து அதனை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக பாரியளவில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
குரோத உணர்வைத் தூண்டும் பதிவுகள் குறித்து இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் முறைப்பாடு செய்தும், முகநூல் நிறுவனம் அதனை உரிய முறையில் கவனத்திற் கொள்ளத் தவறியதாக தொங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதியில் இலங்கையில் முகநூல் பயன்பாட்டை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களில் தாக்கம் செலுத்தாது சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முகநூல் நிறுவனம் தீவிர முனைப்பு காட்டி வருவதாக ரிச்சர்ட் அலன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றில் பங்கேற்ற போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.