சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம், ராதா நகர், 3–வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா (வயது 26). சினிமா நடிகையான இவர், ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘எக்ஸ் வீடியோஸ்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார்.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து அந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ரியாமிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப்–இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி ஆகியோர் விரைந்து சென்று, அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் தூக்கில் தொங்கிய ரியாமிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை செய்தனர்.
ரியாமிகா, கதாநாயகியாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். தினேஷ் என்பவரை அவர் காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார். மேலும் தனது காதலனை பார்க்க வேண்டும் என்று செல்போனில் தினேசை அழைத்தார்.
ஆனால் நள்ளிரவு ஆகி விட்டதால் காலையில் வந்து பார்ப்பதாக கூறி செல்போன் இணைப்பை தினேஷ் துண்டித்து விட்டதாக தெரிகிறது.
உடனே ரியாமிகாவின் தம்பி பிரகாஷ், இரவு நேரத்தில் எதற்கு போன் செய்து தொந்தரவு செய்கிறாய்? என்று கேட்டு விட்டு தனது அறைக்கு தூங்கச்சென்று விட்டார்.
நேற்று காலை காதலன் தினேஷ், ரியாமிகா வீட்டுக்கு வந்தார். ரியாமிகா தினமும் தாமதமாக எழுந்துகொள்வதால் அதை கண்டுகொள்ளவில்லை.
தினேஷ், பிரகாஷ் இருவரும் சேர்ந்து சமையல் செய்து விட்டு ரியாமிகாவை எழுப்ப முயன்றபோதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ரியாமிகாவுக்கு வரும் வருமானத்தை கொண்டுதான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது. அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை.
வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல் கட்டவிசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ரியாமிகா உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் முழுமையாக விசாரணை செய்யப்படும்.
அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை முழுவதும் முடிந்த பிறகுதான் நடிகை ரியாமிகா தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.