நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது போல், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்காது உடனடியாக விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று அவரை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பின் போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகுவது அத்தியாவசியமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல், தொடர்ந்தும் பலவந்தமாக பதவியில் இருப்பது, ஜனாதிபதிக்கு தேவையற்ற அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மகிந்த உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக எடுத்துக்கொண்டாலும் தவறில்லை எனவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பதவியில் இருக்க எண்ணினால், நாடாளுமன்றத்தில் நாளைய தினம் அரசியல் ரீதியான முடிவை எடுக்க நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச பதவி விலக தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அதற்காக குடும்பத்தினரை இணங்க வைப்பதில் சிரமம் காணப்படுவதாக கூறியுள்ளார்.
தான் பதவி விலகுவது, தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்களின் வழக்கு விசாரணைகளுக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனவும் தனது தரப்பு குறித்தும் மனிதாபிமானமாக சிந்தித்து பார்க்குமாறும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இது தொடர்பாக பதிலளித்துள்ள சுதந்திரக்கட்சியின் அணியினர், ஜனாதிபதி ஏற்படும் பாதிப்பை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதியை பாதுகாத்த அணி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, டிசம்பர் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் பதவி விலக போவதில்லை எனவும் எந்த முடிவாக இருந்தாலும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கு பின்னரே எடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.
டிசம்பர் 7 ஆம் திகதி தமது தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதால், தேர்தலுக்கு செல்ல நேரிடும் எனவும் அது தமது தரப்புக்கு சாதகமாக இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் சாதகமற்ற தீர்ப்பை வழங்கினால், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அசௌகரியத்திற்கு உள்ளாவதோ அல்லது அவமதிப்புக்கு உள்ளாவதோ தனக்கு பிரச்சினையில்லை எனவும், அந்த நிலைமை ஏற்பட ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.