வெள்ளகோவில், ஈரோடு சூரம்பட்டி வலசு நேதாஜி வீதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் தொலைபேசி நிலையம் அருகே ஜீவானந்தம் என்பவரின் டீ கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் சத்யபிரியா (21).
நந்தகுமாரும், சத்யபிரியாவும் முகநூல்(பேஸ்புக்) மூலம் பழகினார்கள். அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.
பின்னர் இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் ஊட்டியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் யாரும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து வெள்ளகோவில் உப்புபாளையம் ரோட்டில் வி.ஐ.பி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நந்தகுமாரும், சத்யபிரியாவும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மூலனூர் டீக்கடைகாரர் ஜீவானந்தம் நந்தகுமாரை தேடி அவரது வீட்டுக்கு வந்து உள்ளார்.
வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார்.
அப்போது வீட்டுக்குள் நந்தகுமார் மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டுக்குள் நந்தகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவருடைய மனைவி சத்யபிரியா தரையில் பிணமாக கிடந்ததையும் பார்த்தனர்.
சத்யபிரியா உடல் அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்தது. காதல் தம்பதி இருவரது பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் காதல் தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில், அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்.
நாங்கள் சந்தோஷமாக செல்கிறோம். அதனால் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் போதும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து நந்தகுமாரின் தாய் வெள்ளையம்மாள் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஸ் பச்சாவும் விசாரணை நடத்த உள்ளார்.
காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே வீட்டில் கணவன்–மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.