அமெரிக்க ஜனாதிபதிக்கு டுவிட்டரில் பாடமெடுத்த இந்திய இளம் பெண்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு டுவிட்டரில் பாடமெடுத்த இந்திய இளம்பெண்ணுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

குறிப்பாக மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே பனிப்பொழிவு குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘புவி வெப்பமயமாதலில் என்னதான் நடக்கிறது? முந்தைய வரலாறுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் கொடூரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவை அசாம் மாநிலம், ஜோர்ஹாத் நகரை சேர்ந்த அஸ்தா சர்மாஹ்(18)என்னும் இளம்பெண் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், ‘உங்களைவிட நான் 54 வயது இளையவள். சுமாரான மதிப்பெண்களுடன் தற்போதுதான் நான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறேன்.

இருப்பினும், பருவகாலநிலையும் சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல என்பதை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுக்கு இது புரிவதற்கு வசதியாக நான் பயன்படுத்திய என்சைக்ளோபீடியா நூலை உங்களுக்கு தானமாக அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

அந்த நூலில் இதுதொடர்பான படங்கள் உள்பட அனைத்து விபரங்களும் அடங்கியுள்ளது’.

இவ்வாறு அஸ்தா சர்மாஹ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

அத்துடன், அரபிய கடல் பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள அஸ்தா சர்மாஹ் விரும்பினால் அவருக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் பலர் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.