நம்ம வீட்டுக்கே போய்டலாம் அப்பா… திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கணவர் மற்றும் குடும்பத்தார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெடபுலிபகா கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கு ஸ்ரீனிவாஸ் என்பவருடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது ஸ்ரீனிவாஸுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டது.

ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஸ்ரீனிவாஸ் மற்றும் அவர் பெற்றோர்களான லாசர் மற்றும் நிர்மலா ஆகியோர் அனுஷாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதோடு அனுஷா மீது சந்தேகப்பட்ட ஸ்ரீனிவாஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து தனது தந்தைக்கு நேற்று முன்தினம் போன் செய்த அனுஷா, என்னை வீட்டுக்கு அழைத்து சென்றுவிடுங்கள் என கதறியுள்ளார்.

அதன்படியே மகளை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் அனுஷாவின் தந்தை.

வீட்டுக்கு வந்த அனுஷா தனது அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.

பின்னர் அனுஷாவின் தந்தை சில மணி நேரம் கழித்து ஜன்னல் வழியாக பார்த்த போது அனுஷா தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இது குறித்து அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அனுஷா சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து அனுஷாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீனிவாஸ், லாசர், நிர்மலா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.