கேரளாவின் அபூர்வ கோயில்! குழந்தை பேறு பெற தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம்

பனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.

இது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.

கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம் இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

கேரளாவில் சரஸ்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கோயிலாக இந்த சரஸ்வதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.

வருடமுழுவதுமே இக்கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுவிட்டது.

இயற்கையின் மடியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்பும் ரசிகர்கள் இந்த கிராமத்தை தேடி விஜயம் செய்கின்றனர்.

புகைப்பட ஆர்வலருக்கு பிடிக்கும்படியான காட்சிகளும் பனச்சிகாடு கிராமத்தில் நிரம்பி வழிவது குறிப்பிட வேண்டிய சிறப்பம்சமாகும்.

தாங்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுத்தால் சரஸ்வதிக்கு தாங்கள் வேண்டிக்கொண்ட பொருள்களை படைத்து வழிபடுகிறார்கள்.

குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கு இங்கு வருகிறார்கள். பாட்டு இசை நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக்கொள்ள தொடங்கப்படுகின்றன.

மேலும் இந்த கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். காலையில் 9.30 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலின் நடை அதன் பின் அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பக்தர்கள் வழிபட்டு முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

துர்க்காஷ்டமி, மகாநவமி சரஸ்வதி பூசை நாட்களில் இந்த கோவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். மேலும் அரிதாக காணப்படும் சரஸ்வதி கோவிலும் இதுதான்.