தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பலர் வீடுகள் சேதமடைந்துள்ளது.
புயலால் வீடுகளை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், புயலால் சேதமடைந்த பகுதியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேரில் சென்று சந்திப்பதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவருமான ஆர்.சரத்குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றார்.
ஆலங்குடி அரசமரத்தடி பேருந்து நிறுத்தம் அருகே சரத்குமார் காரில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நடிகர் சரத்குமாரின் காரை மறித்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கி சரத்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகா பகுதியில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு வராமல் அலட்சியம் காட்டுகின்றனர். பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.
புயல் பாதித்த சேதத்தில் இருந்து மீள முடியாமல் தற்போது வரை தவித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தங்கள் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் சேதமடைந்தவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறினார்.
பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் நடிகர் சரத்குமார், பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்றுவிட்டார்.