ஆஸ்திரேலியா கிரிக்கெட்! இந்திய அணி அபாரம்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டி தொடர் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன், இந்திய அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மழை நின்றதும் மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினார்கள். ஆனால் மைதானம் மிகவும் அதிகப்படியான ஈரப்பதமாக இருந்ததால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் முதல் அரை மணி நேரம் முன்னதாகவே ஆட்டம் தொடங்கப்படும் என்று போட்டி நடுவர்கள் அறிவித்து இருந்தனர்.

எதிர்பார்த்தது போலவே அரை மணி நேரம் முன்னதாகவே இன்றைய ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி டாஸ் வென்றது. அவர்கள் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்கள். அதன்படி இந்திய அணியினர் ஆட்டத்தை தொடங்கினார்கள். இந்திய அணியில் முதல் விக்கெட்டாக ராகுல் 3 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ப்ரித்வி ஷா 66 , சேடேஸ்வர் புஜாரா 54, அஜிங்க்ய ரஹானே 56, விராட் கோஹ்லி 64 , ரோஹித் சர்மா 40 , ஹனுமா விஹாரி 53, ரிஷப் பாண்ட் 11 (நாட் அவுட்), ரவிச்சந்திரன் அஸ்வின் 0, உமேஷ் யாதவ் 0, முகமத் ஷமி ௦ என அனைவரும் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். ரஹானே ரிட்டயர்டு ஹட் முறையில் வெளியேறினார்.

பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியினர் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும்படி ஆரம்பம் முதலே வேகமாக விளையாடினார்கள். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு விக்கெட்கள் எதையும் இழக்காமல் உள்ள நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.